திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நடிகை த்ரிஷா போட்டியிடப்போவதாக எழுந்துள்ள தகவல்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் இதுகுறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “நடிகை த்ரிஷா தேர்தலில் போட்டியிடுவதில் என்ன தப்பு இருக்கிறது? ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம்; அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்” எனத் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “த்ரிஷாவைத் த.வெ.க வேட்பாளராக நிறுத்த விரும்பினால், அது அவர்களின் முடிவு; அதை யாரும் எதிர்க்க முடியாது” என்றும் சுட்டிக்காட்டினார். “விஜய் அண்ணனுடன் சினிமாவில் நடித்தவர்களெல்லாம், அவருடன் சேர்ந்து அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புவது இயல்புதான்; வரும் நாட்களில் திரைத்துறையைச் சேர்ந்த இன்னும் நிறைய பேர் அரசியலுக்கு வர அதிக வாய்ப்பிருக்கிறது” என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தமிழக அரசியலில் தவெக ஆளும்கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், இடைத்தேர்தல் களத்தில் பிரபல நட்சத்திரங்கள் களமிறக்கப்படலாம் என்ற ஊகங்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் எம்பியான விஜய் வசந்தின் இந்த ஜனநாயகப் பூர்வமான கருத்துக்கள், திரைத்துறை பிரபலங்களின் அரசியல் வருகை குறித்து அரசியல் வட்டாரங்களில் நிலவி வரும் விவாதங்களுக்கு மேலும் சுவாரசியத்தைச் சேர்த்துள்ளன.