தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் முடிவு ராகுல் காந்தியின் ஆசையும்தானே என்ற கேள்விக்கு, “இந்த முடிவை அவர் எடுத்தார், இவர் எடுத்தார் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை” எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளிப்படையாகப் பதிலளித்துள்ளார்.
ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், கட்சி எடுத்த அரசியல் நிலைப்பாடு குறித்துத் தன் மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.
“‘என்னைப் பிரதமராக்க வேண்டும்’ என ராகுல் காந்தியா நேரடியாக வந்து நம்மிடம் சொல்வார்? ஆக, ஏதோவொரு அரசியல் கணக்கில் நாங்கள் எடுத்த முடிவு தவறாகி, இன்று அவமானப்பட்டு நிற்கிறோம்” என்று மிக ஓபனாகப் பேசித் தன் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.
தவெக ஆட்சிக்கான ஆதரவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த பின்னடைவையும், அகில இந்தியத் தலைமையின் அரசியல் கணிப்புகளில் ஏற்பட்ட தவறுதலையும் ஒப்புக்கொள்ளும் வகையில் செல்வப்பெருந்தகை ஆற்றியுள்ள இந்தச் சூடான பேட்டி, தமிழகக் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் அரசியல் வட்டாரத்திலும் மிகப்பெரிய அதிர்வலைகளையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.