உதயநிதி ஸ்டாலின் கைதா? நீலாங்கரை இல்லத்தில் குவிந்த தஞ்சாவூர் காவல் படை, கொதிக்கும் கே.என்.நேரு!

தமிழக அரசியலில் நாள்தோறும் புதிய திருப்பங்களும் பரபரப்புகளும் அரங்கேறி வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் நீலாங்கரை இல்லத்தில் தஞ்சாவூர் காவல்துறையினர் குவிந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த அரசியல் களத்திலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுவெளியில் பெண்கள் குறித்து அவர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாகப் பேசிய வார்த்தைகள் அருவருக்கத்தக்க வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் அமைந்திருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. உதயநிதியின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ-எம்) மூத்த தலைவர் கே. சண்முகம் உள்ளிட்ட பல தலைவர்களும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக எதிர்கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் (TVK), தேசிய மகளிர் ஆணையத்தில் (NCW) உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது. எம்பி மற்றும் எல்ஏக்கள் பொதுவெளியில் பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் பேசுவதைத் தடுக்க வேண்டும் என்றும், உதயநிதி நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவெக தனது புகாரில் கோரியுள்ளது.

“உச்சக்கட்ட அடக்குமுறை, அராஜகம்!” களத்தில் கொதித்த கே.என். நேரு!

இந்நிலையில், தஞ்சாவூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்யும் நோக்கில் அவரது சென்னை நீலாங்கரை இல்லத்தில் காவல்துறையினர் திரண்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு, செய்தியாளர்களைச் சந்தித்துக் காட்டமான பேட்டி அளித்தார்.

“ஆளும் தரப்பின் ஏவல்துறையாகச் செயல்படும் காவல்துறை, எதிர்க்கட்சித் தலைவரின் குரலை நசுக்கப் பார்க்கிறது. இது ஆளும்தரப்பின் உச்சக்கட்ட அடக்குமுறை மற்றும் ஜனநாயக விரோத அராஜகம் ஆகும். இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது” என கே.என். நேரு கொதிப்புடன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகத் தஞ்சாவூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதும், தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார் அளித்துள்ளதும் தமிழக அரசியலில் திமுக – தவெக இடையிலான நேரடி மோதலை உச்சக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. வழக்கிலிருந்து விலக்கு பெற உதயநிதி தரப்பில் சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் மேலும் சூட பிடித்துள்ளது.

Leave a Comment