“கடன் வாங்குவது தவறில்லை, திரள் நிதி தான் தவறு”: சீமானை சீண்டிய வன்னியரசு!

கட்சிச் செலவுகளுக்காகவும் செயல்பாடுகளுக்காகவும் கடன் வாங்குவது தவறில்லை என்றும், திரள் நிதி (Crowdfunding) என்ற பெயரில் மக்களிடம் நிதி திரட்டுவது தான் தவறு என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு கருத்து தெரிவித்திருந்தார்.

இக்கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தரப்பிலிருந்தும் ஆதரவாளர்கள் தரப்பிலிருந்தும் காட்டமான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘கட்சி வளர்ச்சி நிதி’ ரசீது ஒன்றைச் சுட்டிக்காட்டி வன்னியரசுவிடம் கேள்வி எழுப்பியுள்ள நாம் தமிழர் கட்சியினர், “அமைச்சர் வன்னியரசு அவர்களே… இந்த நிதிக்கு பெயர் என்ன? திரள் நிதியா? அல்லது திருட்டு நிதியா?” என மிகக் காரசாரமாக வினா எழுப்பியுள்ளனர்.

தொண்டர்களிடம் இருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் பெறப்படும் தங்கக் காசுகள் மற்றும் நிதிப் பங்களிப்புகளை ரசீது போட்டுப் பெற்றுக்கொண்டு, மற்ற கட்சிகள் திரள் நிதி திரட்டுவதைக் குறை கூறுவது என்ன மாதிரியான நியாயம் என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அரசியல் கட்சிகள் நிதி திரட்டும் முறை குறித்து இரு துருவ தலைவர்களுக்கும் இடையே வெடித்துள்ள இந்த கருத்து மோதல், தமிழக அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் காரசாரமான விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

Leave a Comment