“அக். 2ல் உலகக் கோப்பை?”: தென்னாப்பிரிக்காவில் காந்தி ஜெயந்தியன்று உலகக்கோப்பை தொடங்க வாய்ப்பு!

தென்னாப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர், காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாத்மா காந்திக்கும் தென்னாப்பிரிக்க மண்ணிற்கும் இடையிலான ஆழமான வரலாற்றுத் தொடர்பை கௌரவிக்கும் வகையிலும் நினைவு கூரும் வகையிலும் சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் (ICC) மற்றும் தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியம் இணைந்து இந்தத் தேதியைத் தேர்வு செய்ய ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய திருவிழாவாகக் கருதப்படும் இந்த 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் அக்டோபர் 2 அன்று தொடங்கி, அதன் இறுதிப் போட்டி நவம்பர் 21-ஆம் தேதி நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக விளையாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலகத் தரம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த பிரம்மாண்டத் தொடர் தென்னாப்பிரிக்காவுடன் சேர்ந்து ஜிம்பாப்வே மற்றும் நமிபியா ஆகிய நாடுகளிலும் கூட்டாக நடத்தப்படவுள்ளது.

காந்தியடிகளின் அறவழிப் போராட்டத்திற்கு வித்திட்ட தென்னாப்பிரிக்க மண்ணில், அவரது பிறந்தநாளில் உலகக் கோப்பை போன்ற சர்வதேசப் விளையாட்டுத் தொடர் தொடங்குவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும், விளையாட்டு ஆர்வலர்களும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொடரைக் காண பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Comment