தமிழக அரசியல் களத்தில் கூட்டணிக் கணக்குகள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரேமலதா விஜயகாந்த், “சோபா செட் இல்லை.. லாக்கரே வந்தாலும் தேமுதிக தங்கள் நிலையில் இருந்து எப்போதும் மாறாது; நமக்குக் கொள்கைதான் முக்கியம்” என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் பிற கட்சிகளின் அணுகுமுறையைக் கடுமையாகச் சாடிய அவர், “ஒரு கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றி பெறுவார்களாம்; தேர்தலுக்குப் பிறகு தங்களின் சுயலாபத்திற்காக இன்னோரு கூட்டணியில் சேர்வார்களாம்” என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நமக்கு என்ன அழைப்பு வரலைனு நினைக்கிறீர்களா? இன்றைய முதலமைச்சரே நம்மை அழைத்தார்” என்று கூறி அரசியல் அரங்கில் புதிய புயலைக் கிளப்பியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் சுயநலத்திற்காகக் கூட்டணிகளை மாற்றி மாற்றி அமைக்கும் கட்சிகளுக்கு மத்தியில், தேமுதிக தனது கொள்கைப்பாட்டிலும் நிலைப்பாட்டிலும் உறுதியாக நிற்கும் எனப் பிரேமலதா விஜயகாந்த் முன்வைத்துள்ள இந்த அதிரடி கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.