மீன் குழம்பு, மீன் வறுவல் லஞ்சம்: கிருஷ்ணராயபுரம் VAO கார்த்திக் பணியிடை நீக்கம்!

வங்கி கடன் பெறுவதற்காக சிட்டா ஆவணம் வழங்கக் கோரி அணுகிய விவசாயியிடம், பணத்திற்குப் பதிலாக மீன் குழம்பு மற்றும் மீன் வறுவலை லஞ்சமாகக் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் (VAO) கார்த்திக் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. வங்கிக் கடனுக்காக அத்தியாவசியமான சிட்டா சான்றிதழ் கோரி நில உரிமையாளரான விவசாயி அணுகியபோது, வருவாய் துறை பணியகத்தில் வைத்து கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் சுவையான மீன் வறுவலும் மீன் குழம்பும் செய்து எடுத்து வருமாறு நிபந்தனை விதித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விசித்திரமான லஞ்சக் கோரிக்கையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விவசாயி, இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டு உண்மை என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் நிர்வாகம் விஏஓ கார்த்திக்கை உடனடியாக சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

சாமானிய மக்களுக்கு அரசுச் சேவைகளை வழங்க வேண்டிய வருவாய்த்துறை ஊழியர் ஒருவர், இதுபோன்ற உணவுப் பண்டங்களை லஞ்சமாகக் கேட்டுப் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம், மாவட்ட நிர்வாக வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், எளிய விவசாயிகளை அலக்கழிக்கும் கீழ்மட்ட அரசு அதிகாரிகளின் இத்தகைய தன்னிச்சையான செயல்பாடுகள் மீதான நடவடிக்கை தொடர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

Leave a Comment