கர்நாடகாவில் முழு அடைப்பு!: ஓசூர் எல்லையில் தமிழகப் பேருந்துகள் நிறுத்தம்!

காவிரி நீர் பங்கீடு விவகாரம் இரு மாநிலங்களுக்கு இடையே மீண்டும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், கர்நாடகாவில் இன்று பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பாக முழு அடைப்புப் போராட்டத்திற்கு (பந்த்) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திடீர் போராட்ட அறிவிப்பால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்தில் இருந்து கர்நாடகா நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஓசூர் எல்லைப் பகுதியிலேயே நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பேருந்துகள் மாநில எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால், பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் பிற பகுதிகளுக்கு நாள்தோறும் பயணம் மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான பயணிகள், வேலைக்குச் செல்வோர் மற்றும் வணிகர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணிகளுக்காகக் கூடுதலான காவல்துறையினர் குவிக்கப்பட்டுத் தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரு மாநில எல்லைகளிலும் நிலவி வரும் இந்தத் பதற்றமான சூழலும், போக்குவரத்துத் தடையும் பொதுமக்கள் மத்தியிலும் வாகன ஓட்டிகளிடையேயும் பெரும் கலக்கத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment