தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவில் மத்திய அமைச்சரைச் சேர்ப்பதற்கு எதிரான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி விசாரணையை அரசியலமைப்பு சாசன அமர்வுக்கு மாற்றப் பரிந்துரைத்துள்ளனர்.
இவ்வழக்கில் நீதிபதி தீபாங்கர் தத்தா வழக்கைப் பெரிய சாசன அமர்வுக்கு மாற்ற மறுப்பு தெரிவித்த நிலையில், நீதிபதி எஸ்.சி. சர்மா கூடுதல் அமர்வுக்கு மாற்ற அனுமதி அளித்துத் தீர்ப்பளித்தார். இவ்வாறு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கிய போதிலும், தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, வழக்கை முழுமையான அரசியலமைப்பு சாசன அமர்வுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதற்கான பிரத்யேக அரசியலமைப்பு சாசன அமர்வை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உடனடியாக உருவாக்க வேண்டும் என்றும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு வலியுறுத்தியுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தன்மை மற்றும் நியாயமான தேர்தல் நடைமுறைகளை உறுதி செய்வதில் இந்தக் வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
முதன்மை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் உயர்மட்டக் குழுவில் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் மத்திய அமைச்சர் இடம்பெறுவது, நிருவாகத் தரப்பின் தலையீட்டை அதிகரித்துத் தேர்தல் அமைப்பின் சுயாட்சியைக் கேள்விகுறியாக்கும் என்ற விமர்சனம் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஜனநாயகத்தின் மிக முக்கியத் தூணான தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு நீதித்துறைக்கு உள்ளது. இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றத்தின் சாசன அமர்வு அளிக்கப்போகும் இறுதைத் தீர்ப்பே, தேர்தல் ஆணையாளர் தேர்வில் நிருவாக அதிகாரத்தின் எல்லையையும், நாட்டின் தேர்தல் அமைப்பின் சுதந்திரமான செயல்பாட்டையும் தீர்மானிக்கும் முதன்மை காரணியாக அமையும்.