மின்சாரச் சீரமைப்பிற்கு அவகாசம் தேவை: தடையற்ற மின் விநியோகத்திற்கு மக்கள் பொறுமை காக்க அமைச்சர் நிர்மல்குமார் வேண்டுகோள்!

தேர்தல் பிரசாரம் மற்றும் அது சார்ந்த பணிகளுக்காக மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் தள்ளிப்போடப்பட்டதால், தற்போது மின் பாதைகள் மற்றும் மின்மாற்றிகளில் (டிரான்ஸ்ஃபார்மர்கள்) பழுதுகள் ஏற்படுவதாக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

இதனால் ஏற்படும் திடீர் மின் தடைகளுக்காகப் பொதுமக்கள் கோபப்படாமல், கட்டமைப்புப் பணிகளை முழுமையாகச் சீரமைக்க அரசுக்கு உரிய அவகாசம் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதற்கட்டமாகப் பழுது ஏற்பட்டுள்ள 6 ஆயிரம் டிரான்ஸ்ஃபார்மர்களை போர்க்கால அடிப்படையில் மாற்றி அமைத்துச் சீரமைப்பதற்கான அதிரடி நடவடிக்கைகள் முடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

தேர்தல் அரசியலுக்காக அத்தியாவசியச் சேவையான மின்சாரக் கட்டமைப்பின் பராமரிப்புப் பணிகளைத் தள்ளிப்போட்ட நிருவாக ரீதியான குளறுபடியை அமைச்சரின் இக்கூற்று வெளிப்படையாக உணர்த்துகிறது.

மக்கள் நலனை விடத் தேர்தல் பிரசாரங்களுக்கு முன்னுரிமை அளித்துவிட்டு, தற்போதைய மின் வெட்டிற்குப் பழியைப் பழைய பராமரிப்புத் தாமதத்தின் மீது போடுவது ஆளும் தவெக அரசின் திட்டமிடல் குறைபாட்டையே காட்டுகிறது.

கோடைக்காலம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளின் போது திடீர் மின் தடையால் பொதுமக்கள் மற்றும் சிறு தொழில் முனைவோரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழலில், வெறும் ‘அவகாசம் கோருவது’ மட்டுமே தீர்வாகிவிடாது.

வாக்குறுதிகளை அள்ளிவீசி ஆட்சியைப் பிடித்த அரசு, 6 ஆயிரம் டிரான்ஸ்ஃபார்மர்களையும் விரைந்து சீரமைத்துத் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதே நிருவாகச் சீர்மைக்குச் சரியான சான்றாக அமையும்.

Leave a Comment