தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கிற்கு முதலமைச்சர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்தப் பதில் மனுவில், “தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை எவ்விதத்திலும் பயன்படுத்தவில்லை; எனவே, எனது வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியாது” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் செலவுக் கணக்குகளை மறைத்ததாகவும், வழிபாட்டுத் தலங்களில் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாகவும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்க தரப்பினரால் சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் முற்றிலும் மறுத்துள்ள முதலமைச்சர் விஜய், இந்தத் தேர்தல் வழக்கு உள்நோக்கம் கொண்டது என்றும், எனவே வழக்கை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சர் தாக்கல் செய்துள்ள இந்த அதிரடி பதில் மனு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.