தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் ஒன்றான காவிரி நீர் விவகாரத்தில், மாநிலத்தின் உரிமைகளைப் பெற எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயார் எனத் தமிழக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அதிரடியாகப் பேசியுள்ளார். சட்டப்பேரவை நிகழ்வின் போது பேசிய அவர், “காவிரி என்பது வெறும் நீர் ஆதாரம் மட்டுமல்ல, அது தமிழகத்தின் உயிர் ஆதாரம்.
இந்த மிக முக்கியமான பிரச்சினையை வைத்து எந்தவிதமான அரசியலும் செய்யும் எண்ணம் எனக்குச் சிறிதும் இல்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், “உலகளவில் எதிரும் புதிருமாக இருக்கும் பகை நாடுகளே தங்களின் எல்லைப் பிரச்சினைகளையும் பிற முரண்பாடுகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளும்போது, நமது பக்கத்து மாநிலத்திற்கு நேரில் சென்று ஏன் பேசக்கூடாது என்று யோசித்தேன்.
அப்படித் தமிழகத்தின் உரிமைகளுக்காகப் பேச்சுவார்த்தை நடத்த நேரில் செல்லும்போது, ஒருவேளை நமக்கு அவமானம் நேரிட்டிருந்தாலும் பரவாயில்லை; தமிழ்நாட்டின் நலனுக்காக அந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ளவும் நான் தயாராகவே இருந்தேன்” என்று உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டார்.
முதல்வரின் இந்தப் பேச்சு, மாநிலத்தின் நீர் உரிமைகளுக்காகக் கட்சி வேறுபாடுகளைக் கடந்து குரல் கொடுக்கும் அவரது உறுதியான அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக அமைந்ததோடு, சட்டப்பேரவையில் பெரும் கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.