காப்பாளர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: நாளை முதலமைச்சர் விஜய் முறைப்படி தொடங்கி வைக்கிறார்!

தமிழக அரசின் ‘காமராஜர் காலை உணவுத் திட்டத்தின்’ முக்கிய விரிவாக்கத்தை முதலமைச்சர் விஜய் நாளை முறைப்படி தொடங்கி வைக்கிறார். சென்னை திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம் நடுநிலைப் பள்ளியில் நடைபெறும் சிறப்பு நிகழ்வில், மாணவர்களுக்கு நேரில் உணவைப் பரிமாறி இந்த விரிவாக்கத் திட்டத்தை அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.

இதுவரை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இத்திட்டம், தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கூடுதலாக 17 லட்சம் மாணவர்கள் பயனடையவுள்ளதுடன், ஒட்டுமொத்தமாகப் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 35 லட்சமாக உயர்கிறது. மாநிலம் முழுவதிலும் உள்ள மொத்தம் 44,984 அரசுப் பள்ளிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறவுள்ள நிலையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பள்ளிகளுடன் கூடுதலாக 7,537 பள்ளிகள் இப்பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

எனினும், தேர்தல் விதமுறைகள் அமலில் உள்ள இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளைத் தவிர்த்து, மாநிலத்தின் பிற அனைத்துப் பகுதிகளிலும் இத்திட்டம் உடனடியாகச் செயல்பாட்டிற்கு வருகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் வருகைப் பதிவை அதிகரிக்கும் நோக்கில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டாலும், நிதி ஒதுக்கீடு மற்றும் உணவின் தரக் கட்டுப்பாட்டை அனைத்துப் பள்ளிகளிலும் தொய்வின்றிப் பராமரிப்பதே இத்திட்டத்தின் உண்மையான வெற்றிக்கு முக்கியச் சவாலாக இருக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave a Comment