போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் சிம் கார்டுகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், விதிகளை மீறுவோருக்கு ரூ.50 லட்சம் வரை அபராதத்துடன் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் தொலைத்தொடர்பு துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், ஒருவர் தனது பெயரில் வாங்கிய சிம் கார்டை மற்றவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம் கார்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதும், முறைகேடான வழிகளில் ஆவணங்களை உருவாக்கி புதிய இணைப்புகளைப் பெறுவதும் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் டிஜிட்டல் மற்றும் நிதி சார்ந்த குற்றங்களுக்கு முக்கியக் காரணமாக அமைவதாகப் புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதன் விளைவாகவே, சிம் கார்டு விநியோகம் மற்றும் பயன்பாட்டில் தீவிரக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தும் நோக்கில் தொலைத்தொடர்பு துறை இந்த அதிரடி சட்ட நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. இணையவழிக் குற்றங்கள் மற்றும் செல்போன் மூலமாக நடைபெறும் மோசடிகளைக் கட்டுப்படுத்த இத்தகைய கடுமையான சட்ட நடவடிக்கைகள் மிக அவசியமான ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அதேவேளையில், கடைகளில் முறைப்படி சிம் கார்டு வாங்கும் சாதாரணப் பயனாளர்களும், சிறு வணிகர்களும் தேவையற்ற நிருவாகச் சிக்கல்களில் சிக்கி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதும் அரசின் முதன்மைப் பொறுப்பாகும்.