ஊழலுக்கு எதிராகத் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பு மிகவும் வலுவானது என்றும், இது அரசு அதிகாரிகளிடையே லஞ்சம் வாங்குவது குறித்த பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது என்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் இருந்துதான் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் உருவாகிறார்கள் என்று சுட்டிக்காட்டிய அவர், ஊழலுக்கு எதிரான உண்மையான மாற்றமும் இந்தச் சமூகத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஊழலை ஒழிக்கும் விஷயத்தில் வெறும் அரசாங்கமும் சட்டங்களும் மட்டுமே போதாது என்றும், ஒவ்வொரு தனி மனிதனின் பங்களிப்பும் பொறுப்புணர்வும் இருந்தால் மட்டுமே லஞ்சத்தையும் ஊழலையும் சமூகத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்றும் கருத்துத் தெரிவித்தார்.
நேர்மையான நிர்வாகத்திற்குப் பெயர் பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், முதல்வரின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையைப் பாராட்டி, மக்களிடையே விழிப்புணர்வு அவசியம் எனக் கூறியுள்ளது அரசு நிர்வாக வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.