விவசாயிகள் எதிர்ப்பால் பாதியில் வெளியேறிய அமைச்சர்கள்: திருச்சி சமயபுரம் அருகே உச்சக்கட்டப் பரபரப்பு!

திருச்சி சமயபுரம் அருகே பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யக்கோரி 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்து 5-வது நாளாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிடைந்துள்ளது.

நிலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர அமைச்சர்கள் வினோத், ரமேஷ், காந்திராஜ் ஆகியோர் நேரடியாகப் போராட்டக் களத்திற்குச் சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பேசிய அமைச்சர் ரமேஷ், “தற்போது இடைத்தேர்தல் நடைமுறையில் இருப்பதால் உடனடியாகப் புதிய அறிவிப்புகளை வெளியிட இயலாது; எனவே அரசுக்கு 20 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கோரினார்.

ஆனால், அமைச்சரின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்த போராட்டக்காரர்கள், உடனடித் தீர்வு வேண்டும் என வலியுறுத்தி அமைச்சர்களுக்கு எதிராகக் கடுமையான கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். விவசாயிகளின் தீவிரமான எதிர்ப்பாலும் கொந்தளிப்பான சூழலாலும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்த முடியாமல், அமைச்சர்கள் அங்கிருந்து பாதியிலேயே புறப்பட்டுச் சென்றனர்.

இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், அமைச்சர்கள் விவசாயிகளால் திருப்பி அனுப்பப்பட்ட இந்தச் சம்பவம் ஆளும்கட்சிக்கு பெரும் அரசியல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

விவசாயிகளின் அத்தியாவசியக் கோரிக்கைகளுக்குத் தேர்தல் நடத்தை விதிகளைச் சாட்டி கால அவகாசம் கேட்பது ஏற்புடையதல்ல எனப் போராட்டக் குழுவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் திருச்சி மற்றும் அதன் சுற்றியுள்ள விவசாய மண்டலங்களில் பெரும் பரபரப்பையும் அரசியல் வட்டாரத்தில் காரசார விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது

Leave a Comment