தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, பொதுமக்கள் காலி குடங்களுடன் வீதியில் இறங்கிப் போராடும் சூழல் தொடர்ந்து நீடிப்பது மிகுந்த கவலையளிப்பதாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோடைக்காலம் மற்றும் நீர் தேவையை முன்னரே கணித்து, சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் அரசு முற்றிலும் தவறிவிட்டதாக அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீருக்காகக் குடங்களைப் பிடித்துக்கொண்டு மணி கணக்கில் காத்திருக்கும் அவல நிலைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்வெல் (ஆழ்துளைக்ணறுகள்) அமைத்தும், லாரிகள் மூலம் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்தும் மக்களின் தாகத்தைப் தணிக்க அரசு உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் உள்ளூர் நிர்வாகமும் அரசும் அலட்சியம் காட்டாமல் விரைந்து செயல்பட வேண்டும் என்ற நயினார் நாகேந்திரனின் இந்த அறிக்கை, மக்கள் சந்திக்கும் அத்தியாவசியப் பிரச்சினையை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.