“எனக்கு சுகர் உள்ளது”: பேரவைக் கூட்ட நேரத்தைக் குறைக்க சபாநாயகரிடம் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தினமும் காலை முதல் மாலை வரை நீண்ட நேரம் தொடர்ச்சியாக நடைபெறுவதால் பேரவை உறுப்பினர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டமன்றத்தில் சர்க்கரை நோய் பாதிப்பு குறித்துப் பேசிய அவர், “எனக்குச் சர்க்கரை நோய் (சுகர்) உள்ளது. என்னைப்போலப் பல சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சர்க்கரை நோய் இருப்பதால், காலை முதல் மாலை வரை பேரவை நடவடிக்கைகள் நீண்டுகொண்டே செல்வது மிகுந்த சிரமத்தையும் வேதனையையும் அளிக்கிறது” என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.

நீண்ட நேரம் இடைவெளியின்றி அவை இயங்குவதால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் மயங்கி விழும் அளவுக்குச் சூழல் மோசமாக உள்ளதாகத் தெரிவித்த ஓபிஎஸ், உறுப்பினர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு பேரவைக் கூட்டத்தை விரைவாக முடித்துக்கொள்ள வேண்டும் எனச் சபாநாயகர் அப்பாவியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவை உறுப்பினர்களின் ஆரோக்கியம் மற்றும் பணிச் சுமையைக் குறைக்கும் வகையில் கூட்ட நேரத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் எழுப்பிய இந்த இயல்பான மற்றும் நியாயமானக் கோரிக்கை, சட்டமன்றத்தில் இருந்த சக உறுப்பினர்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. மூத்த அரசியல்வாதியான ஓபிஎஸ் தமக்கிருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பைக் குறிப்பிட்டு, உறுப்பினர்களின் நலனுக்காகச் சபாநாயகரிடம் முன்வைத்த இந்த வேண்டுகோள், தற்போது சமூக வலைதளங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டு விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Leave a Comment