இந்தியாவின் பிரம்மாண்டமான தேர்தல் நடைமுறைகள் மற்றும் வாக்காளர்களின் அடையாள அட்டை சரிபார்ப்பு முறையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்தியாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 64.6 கோடி மக்கள் வாக்களித்ததாகவும், அதில் பெரும்பாலானோர் புகைப்படம் கூடிய உரிய அடையாள அட்டையைச் சமர்ப்பித்தே வாக்களித்தனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தபால் வாக்குகள் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே பதிவாகியுள்ளன என்பதைக் குறிப்பிட்டு, இந்தியத் தேர்தல் முறையின் வெளிப்படைத்தன்மையையும் கட்டுப்பாடுகளையும் அவர் பாராட்டியுள்ளார்.
இத்தகைய துல்லியமான நடைமுறையை அமெரிக்க தேர்தல்களிலும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ள டிரம்ப், அமெரிக்காவில் வாக்காளர்களுக்குப் புகைப்பட அடையாள அட்டையைக் கட்டாயமாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்காக அமெரிக்காவில் ‘SAVE America Act’ என்ற சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், இதுவே தேர்தல் முறையை மேலும் பலப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அமெரிக்க அதிகாரிகளிடம் இது குறித்து உரையாடியதை நினைவுகூர்ந்த அவர், அமெரிக்காவிலும் இத்தகைய சட்டப் பாதுகாப்பு அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் வாக்காளர் அடையாள அட்டை முறையை முன்மாதிரியாக வைத்து டொனால்ட் டிரம்ப் பேசியுள்ள கருத்துக்கள் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளன. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல் கட்டுப்பாடுகளை அமெரிக்க அதிபர் பாராட்டியுள்ளது, இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டிற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.