பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்காக முதற்கட்ட ஆய்வுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மீனவர்களின் வாழ்வாதாரத்திற்குப் பாதிப்பு என்றால் அரசு அவர்கள் பக்கமே நிற்கும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய சட்டமன்றம் அமைப்பது தொடர்பாகத் தற்போது முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வுகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன” என்று தெளிவுபடுத்தினார்.
மேலும், “தலைமைச் செயலகமா அல்லது மீனவர்களின் வாழ்வாதாரமா என்ற கேள்வி எழுந்தால், எங்கள் தலைவர் விஜய் எப்போதுமே மீனவர்களின் பக்கம்தான் நிற்பார்” என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
கடலோர நிருவாக மையங்களை அமைப்பது தொடர்பான அரசின் இந்தத் திட்டத்திற்கு உள்ளூர் மீனவ சமூகத்தினரும் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமைச்சரின் இந்த விளக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஒருபுறம் புதிய தலைமைச் செயலகத் திட்டத்திற்கான நில அளவை மற்றும் ஆய்வுப் பணிகளைத் தீவிரமாக முடுக்கிவிட்டுக்கொண்டே, மறுபுறம் மீனவர்களின் எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக அரசு இத்தகைய முரண்பாடான விளக்கங்களை அளித்து வருவதாகப் பொதுநல ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.
வளர்ச்சித் திட்டங்களுக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் இடையிலான மோதல் தொடரும் சூழலில், ஆளும் தவெக அரசின் இந்த நிலப்பாடு அரசியல் களத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.