“அரசு மருத்துவமனைக்கு அமைச்சர்கள் செல்கிறார்களா?”: சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எழுப்பிய கேள்வி!

தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அரசு மருத்துவமனைகளின் தரம் மற்றும் அரசு சேவைகள் குறித்துப் பேரவையில் மிக முக்கியமான கருத்துக்களை முன்வைத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டி அவர் உரையாற்றினார்.

அவையில் பேசிய அவர், “இங்கு இலவச மருத்துவமனை, இலவசக் கல்வி, இலவச அரிசி எனப் பல்வேறு நலத்திட்டங்கள் உள்ளன. ஆனால், மந்திரிகளோ அல்லது சட்டமன்ற உறுப்பினர்களோ இந்தச் சேவைகளைப் பயன்படுத்துவது கிடையாது.

இதுவரை எந்த அமைச்சராவது இலவச அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைக்காகப் படுத்துள்ளாரா? உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக சிங்கப்பூர் போகிறார்கள். அரசு வழங்கும் இலவசம் என்பது கருணை அடிப்படையில் அல்லாமல், தகுதி அடிப்படையில் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்த அவர், “நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் நாமே தைரியமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குப் போக வேண்டும்; அந்த அளவிற்குத் தரமான அரசு மருத்துவமனைகளை நாம் உருவாக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். மக்கள் பிரதிநிதிகளே நம்பிச் செல்லும் அளவிற்கு அரசு சேவை மையங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் பேசிய இந்த உரை, தற்போது அரசியல் தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கவனத்தைப் பெற்று விவாதிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment