தமிழக சட்டமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் விவாதங்கள் மற்றும் கூட்டத் தொடரின் போக்கைக் சுட்டிக்காட்டி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துத் தனது காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் மக்களின் முக்கியப் பிரச்சினைகள் குறித்துப் பேச போதிய நேரமும் வாய்ப்பும் கிடைக்கவில்லை என்று அவர் தனது பேட்டியில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “பேரவையில் எந்த ஒரு பிரச்சினை குறித்துப் பேசத் தொடங்கினாலும், எல்லா கேள்விகளுக்கும் பிரச்சினைகளுக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாதான் பதில் சொல்கிறார்.
விவாதத்தின் பாதி நேரத்திற்கும் மேலாக அவரே தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதால், சட்டமன்றத்தில் பேச வேண்டிய முதன்மையான விஷயங்கள் அனைத்தும் திசைமாறி (Divert) விடுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்த அவர், “இதன் காரணமாக மற்ற உறுப்பினர்கள் பேச வேண்டிய முக்கியமான தலைப்புகளுக்கு நேரமும் பத்தமாட்டேங்குது, இதான் தற்போதைய உண்மை நிலை” என்று மிகக் காரசாரமாகக் குறிப்பிட்டடார்.
சட்டமன்றத்தில் விவாதங்கள் சரியான திசையில் நடைபெற வேண்டும் என்றும், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே நபர் பதிலளிப்பதைத் தவிர்த்து, மற்ற உறுப்பினர்களுக்கும் பேசப் போதிய நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பிரேமலதா விஜயகாந்தின் இந்தத் திடீர் விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.